| 1. நூன்மரபு |
| 1. | எழுத்தெனப்படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே. |
|
என்பது சூத்திரம்.
|
இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின் எழுத்திலக்கணம்
உணர்த்தினமை காரணத்தான் எழுத்ததிகாரமென்னும் பெயர்த்து. எழுத்தை
உணர்த்திய அதிகாரமென விரிக்க. அதிகாரம் - முறைமை.
|
எழுத்து உணர்த்துமிடத்து எனைத்து வகையான்
உணர்த்தினாரோவெனின் எட்டுவகையானும் எட்டிறந்த பலவகையானும்
உணர்த்தினாரென்க.
|
1எட்டு வகைய வென்பார் கூறுமாறு:-எழுத்து இனைத் தென்றலும்,
இன்ன பெயரின வென்றலும், இன்ன முறையின வென்றலும், இன்ன
அளவின வென்றலும், இன்ன பிறப்பின வென்றலும், இன்ன
புணர்ச்சியினவென்றலும், இன்ன வடிவின வென்றலும், இன்ன தன்மையின
வென்றலுமாம். இவற்றுள் தன்மையும் வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின்
ஆசிரியர் ஈண்டு உரைத்திலர். ஏனைய இதனுட் பெறுதும்.
|
எழுத்து இனைத்தென்றலைத் தொகை வகை விரியான் உணர்க.
முப்பத்துமூன் றென்பது தொகை. உயிர் பன்னிரண்டும் உடம்பு
பதினெட்டுஞ் சார்பிற்றோற்றம் மூன்றும் அதன் வகை. அளபெடை
யேழும் உயிர்மெய் யிருநூற்றொருபத்தாறும் அவற்றோடுங் கூட்டி
இருநூற்றைம்பத்தாறெனல் விரி.
|
இனி எழுத்துக்களது பெயரும் முறையுந் தொகையும் இச்சூத்திரத்தாற்
பெற்றாம். வகை 'ஒளகார விறுவாய்' (எழு - 8) என்பதனானும்,
'னகாரவிறுவாய்' (எழு - 9) என்பதனானும், 'அவைதாங், குற்றியலிகரங்
குற்றியலுகரம்' (எழு - 2) என்பதனானும் பெற்றாம். விரி 'குன்றிசைமொழி
வயின்' (எழு - 41) என்பதனானும், 'புள்ளியில்லா' (எழு - 17)
என்பதனானும் பெற்றாம்.
|
அளவு 'அவற்றுள், அ இ உ' (எழு - 3) என்பதனானும், 'ஆ ஈ ஊ'
(எழு - 4) என்பதனானும், 'மெய்யினளவே' (எழு - 11) என்பதனானும்,
'அவ்விய னிலையும்' (எழு - 12) என்பதனானும் பெற்றாம்.
|
பிறப்பு பிறப்பியலுட் பெற்றாம்.
|
புணர்ச்சி 'உயிரிறு சொன்முன்' (எழு - 107) என்பதனானும், 'அவற்று,
ணிறுத்தசொல்லின்' (எழு - 108) என்பதனானும், பிறவாற்றானும் பெற்றாம்.
|
இனி 2எட்டிறந்த பல்வகைய வென்பார் கூறுமாறு:- எழுத்தூக்களது
குறைவுங், கூட்டமும், பிரிவும், மயக்கமும், மொழியாக்கமும், நிலையும்,
இனமும், ஒன்று பலவாதலுந், திரிந்ததன்றிரிபு அதுவென்றலும்,
பிறிதென்றலும், அதுவும் பிறிதுமென்றலும், நிலையிற்றென்றலும்,
நிலையாதென்றலும், நிலையிற்றும்நிலையாது மென்றலும் இன்னோரன்ன
பலவுமாம்.
|
குறைவு 'அரையளவு குறுகல்' (எழு - 13) 'ஓரளபாகும்' (எழு - 58)
என்பனவற்றாற் பெற்றாம்.
|
கூட்டம் 'மெய்யோ டியையினும்' (எழு - 10) 'புள்ளியில்லா' (எழு - 17)
என்பனவற்றாற் பெற்றாம்.
|
பிரிவு 'மெய்யுயிர்நீங்கின்' (எழு - 139) என்பதனாற் பெற்றாம்.
|
மயக்கம் 'ட ற ல ள' (எழு -23) என்பது முதலாக 'மெய்ந்நிலைசுட்டின்'
(எழு - 30) என்பதீறாகக் கிடந்தனவற்றாற் பெற்றாம்.
|
மொழியாக்கம் 'ஓரெழுத்தொருமொழி' (எழு -45) என்பதனாற் பெற்றாம்,
அவ்வெழுத்துக்களை மொழியாக்கலின்.
|
நிலை 'பன்னீருயிரும்' (எழு - 59) 'உயிர்மெய்யல்லன' (எழு - 60)
'உயிர்ஒள' (எழு - 69) 'ஞணநமன' (எழு - 78) என்பன. இவற்றான்
மொழிக்கு முதலாம் எழுத்தும் ஈறாமெழுத்தும் பெற்றாம்.
|
இனம் 'வல்லெழுத்தென்ப' (எழு - 19) 'மெல்லெழுத்தென்ப' (எழு - 20)
'இடையெழுத்தென்ப' (எழு - 21) 'ஒளகாரவிறுவாய்' (எழு - 8)
'னகாரவிறுவாய்' (எழு - 9) என்பனவற்றாற் பெற்றாம். இவற்றானே
எழுத்துக்கள் உருவாதலும் பெற்றாம். இவ்வுருவாகிய ஓசைக்கு ஆசிரியர்
வடிவு கூறாமை உணர்க. இனி வரிவடிவு கூறுங்கால் மெய்க்கே
பெரும்பான்மையும் வடிவுகூறுமாறு உணர்க.
|
ஒன்று பலவாதல் 'எழுத்தோரன்ன' (எழு - 141) என்பதனாற் பெற்றாம்.
|
திரிந்ததன்றிரிபதுவென்றல் 'தகரம் வருவழி' (எழு - 369)
என்பதனானும் பிறாண்டும் பெற்றாம்.
|
பிறிதென்றல் 'மகரவிறுதி' (எழு - 310) 'னகாரவிறுதி' (எழு - 332)
என்பனவற்றாற் பெற்றாம்.
|
அதுவும்பிறிதுமென்றல் 'ஆறனுருபி னகரக்கிளவி' (எழு - 115)
என்பதனாற் பெற்றாம்.
|
நிலையிற்றென்றல் 'நிறுத்தசொல்லினீறாகு' (எழு - 108) என்பதனாற்
பெற்றாம்.
|
நிலையாதென்றல் நிலைமொழியது ஈற்றுக்கண்ணின்றும் வருமொழியது
முதற்கண்ணின்றும் புணர்ச்சி தம்முள் இலவாதல். அது 'மருவின்றொகுதி'
(எழு - 111) என்பதனாற் பெற்றாம்.
|
நிலையிற்றும் நிலையாதுமென்றல் 'குறியதன் முன்னரும்' (எழு - 226)
என்பதனாற் கூறிய அகரம் 'இராவென்கிளவிக் ககரமில்லை' (எழு - 227)
என்பதனாற் பெற்றாம்.
|
இக்கூறிய இலக்கணங்கள் கருவியுஞ் செய்கையுமென இருவகைய.
|
அவற்றுட் கருவி புறப்புறக் கருவியும், புறக் கருவியும், அகப்புறக்
கருவியும், அகக்கருவியு மென நால்வகைத்து. நூன் மரபும் பிறப்பியலும்
புறப்புறக் கருவி. மொழிமரபு புறக் கருவி. புணரியல் அகப்புறக்கருவி. 'எகர
ஒகரம் பெயர்க் கீறாகா' (எழு - 272) என்றாற்போல்வன அகக்கருவி.
|
இனிச் செய்கையும் புறப்புறச்செய்கையும், புறச்செய்கையும்,
அகப்புறச்செய்கையும், அகச்செய்கையுமென நால்வகைத்து. 'எல்லா
மொழிக்கு முயிர்வரு வழியே' (எழு - 140) என்றாற் போல்வன
புறப்புறச்செய்கை. 'லனவென வரூஉம் புள்ளி முன்னர்' (எழு - 149)
என்றாற்போல்வன புறச்செய்கை. 'உகரமொடு புணரும் புள்ளியிறுதி'
(எழு - 163) என்றாற்போல்வன அகப்புறச்செய்கை. தொகை மரபு முதலிய
ஓத்தினுள் இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவனவெல்லாம்
அகச்செய்கை. இவ்விகற்பமெல்லாந் தொகையாக உணர்க.
|
இவ்வோத் தென்னுதலிற்றோ வெனின், அதுவும் அதன்
பெயருரைப்பவே அடங்கும்.
|
இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின் இத் தொல்காப்பியமென்னும்
நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து
உணர்த்தினமையின் நூன்மர பென்னும் பெயர்த்தாயிற்று.
|
நூலென்றது நூல்போறலின் ஒப்பினாயதோர் ஆகுபெயராம்.
அவ்வொப்பாயவா றென்னை யெனின், குற்றங் களைந்து எஃகிய
பன்னுனைப் பஞ்சிகளையெல்லாங் கைவன்மகடூஉத் தூய்மையும் நுண்மையு
முடையவாக ஓரிழைப் படுத்தினாற் போல 'வினையி னீங்கி விளங்கிய
வறிவ' (மரபியல் - 94) னாலே வழுக்களைந்து எஃகிய
இலக்கணங்களையெல்லாம் முதலும் முடிவும் மாறுகோளின்றாகவுந்,
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையுங் காண்டிகையும்
உள்நின்று அகலவும், ஈரைங்குற்றமுமின்றி ஈரைந்தழகுபெற, முப்பத்திரண்டு
தந்திரவுத்தியோடு புணரவும்,
|
'ஒருபொரு ணுதலிய சூத்திரங் தானு மினமொழி கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானு மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்.'
|
|
(செய்-168) |
ஒருநெறிப்படப் புணர்க்கப்படூ உந்தன்மையுடைமையானென்க. மரபு,
இலக்கணம், முறைமை, தன்மை என்பன ஒருபொருட் கிளவி.
|
ஆயின் நூலென்றது ஈண்டு மூன்றதிகாரத்தினையு மன்றே? இவ்வோத்து
மூன்றதிகாரத்திற்கும் இலக்கண மாயவா றென்னையெனின், எழுத்துக்களது
பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்குஞ் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது.
ஈண்டுக் கூறிய முப்பத்துமூன்றனைப் பதினைந்தாக்கி ஆண்டுத்
தொகைகோடலின் தொகை வேறாம். அளவு செய்யுளியற்கும்
இவ்வதிகாரத்திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவு முளவாகக் கூறியது.
குறிற்கும் நெடிற்குங் கூறியமாத்திரை இரண்டிடத்திற்கும் ஒத்த அளவு.
ஆண்டுக் கூறுஞ் செய்யுட்கு அளவு கோடற்கு ஈண்டைக்குப் பயன் தாராத
அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது 'அளபிறந் துயிர்த்தலும்'
(எழு - 33) என்னுஞ் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறியுமாற்றான்
உணர்க. இன்னுங் குறிலும் நெடிலும் மூவகையினமும் ஆய்தமும்
வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. குறையும்
இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் இவ்வதிகாரத்திற்கே
உரியனவாகக் கூறியன. 'அம்மூவாறும்' (எழு - 22) என்னுஞ் சூத்திர
முதலியவனவற்றான் எழுத்துக்கள்கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையிற்
சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று. இங்ஙனம்
மூன்றதிகாரத்திற்கும் இலக்கணங் கூறுதலின் இவ்வோத்து நூலினது
இலக்கணங் கூறியதாயிற்று. நூலென்றது தொல்காப்பியமென்னும்
பிண்டத்தை. இவ் வோத்திலக்கணங் கடாம் எழுத்துக்களது பெயரும்
முறையுந்தொகையும் அளவுங் குறைவுங் கூட்டமும் இனமும் மயக்கமுமாம்.
ஏனைய இவ்வதிகாரத்துள். ஏனையோத்துக்களுள் உணர்த்துப.
|
அற்றேல் அஃதாக, இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,
எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதனுதலிற்று.
|
இதன் பொருள்: எழுத்தெனப்படுப - எழுத்தென்று சிறப்பித்துச்
சொல்லப்படுவன, அகரமுதல் னகரவிறுவாய் முப்பஃதென்ப - அகரமுதல்
னகரம்ஈறாகக்கிடந்த முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர், சார்ந்துவரல்
மரபின் மூன்றலங்கடையே -சார்ந்துவருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய
மூன்றும் அல்லாத இடத்து என்றவாறு.
|
எனவே, அம்மூன்றுங் கூடியவழி முப்பத்துமூன்றென்ப. அ-ஆ-இ-ஈ-உ
-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஒள-க்-ங்-ச்-ஞ்-ட்-ண்-த்-ந்-ப்-ம் -ய்-ர்-ல்-வ்-ழ் -ள்-ற்-ன்
எனவரும். எனப்படுவ வென்று சிறப்பித்துணர்த்துதலான் அளபெடையும்
உயிர்மெய்யும் இத்துணைச் சிறப்பில; ஓசையுணர்வார்க்குக் கருவியாகிய
வரிவடிவுஞ் சிறப்பிலா எழுத்தாகக் கொள்ளப்படும்.
|
அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே
கூறுகின்றாரென்பது உணர்தற்கு னகரவிறுவா யென்றார்.
|
படுப, படுவ. படுபவென்பது படுத்தலோசையால் தொழிற் பெயராகக்
கூறப்படும். பகரமும் வகரமும் ஈண்டு நிற்றற்குத் தம்முள்
ஒத்தஉரிமையவேனும், எழுத்தெனப்படுவவெனத் தூக்கற்றுநிற்குஞ்
சொற்சீரடிக்குப் படுபவென்பது இன்னோ சைத்தாய்நிற்றலின் ஈண்டுப்
படுபவென்றே பாடம் ஓதுக. இஃது அன்பெறாத அகரவீற்றுப் பலவறிசொல்.
|
அகர னகரமெனவே பெயருங் கூறினார்.
|
எழுத்துக்கட்கெல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் 'மெய்யி னியக்க
மகரமொடு சிவணும்' (எழு - 46) என்பதனாற் கூறுப. வீடுபேற்றிற்கு உரிய
ஆண்மகனை உணர்த்துஞ் சிறப்பான் னகரம் பின்வைத்தார். இனி
எழுத்துக்கட்குங் கிடக்கை முறையாயினவாறு கூறுதும்.
|
குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறி அவற்றிற்கு இனமொத்த
நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒருமாத்திரை
கூறியே இரண்டுமாத்திரை கூறவேண்டுதலின். அன்றி இரண்டை
முற்கூறினாலோவெனின், ஆகாது; ஒன்று நின்று அதனோடு பின்னரும்
ஒன்று கூடியே இரண்டாவதன்றி இரண்டென்பதொன்று இன்றாதலின்.
இதனான் ஒன்றுதான் பலகூடியே எண் விரிந்ததென்று உணர்க.
|
இனி, அகரத்தின்பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும்
ஒத்தலின் வைத்தார். இகரத்தின்பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு
ஒவ்வாதேனும் 'அ-இ-உ அம் மூன்றுஞ் சுட்டு' (எழு - 31) எனச்
சுட்டுப்பொருட்டாய் நிற்கின்ற இனங் கருதி. அவை ஐம்பாற்கண்ணும்
பெரும்பான்மை வருமாறு உணர்க. எகரம் அதன்பின் வைத்தார், அகர
இகரங்களோடு பிறப்பு ஒப்புமைபற்றி, ஐகார ஒளகாரங்கட்கு இனமாகிய
குற்றெழுத்து இன்றேனும் பிறப்பு ஒப்புமைபற்றி ஏகார ஓகாரங்களின்
பின்னர் ஐகார ஒளகாரம் வைத்தார். ஒகரம் நொ என மெய்யோடு
கூடிநின்றல்லது தானாக ஓரெழுத் தொருமொழியாகாத சிறப்பின்மைநோக்கி
ஐகாரத்தின்பின் வைத்தார். அ-இ-உ-எ என்னும் நான்கும் அக்கொற்றன்
இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற்றான் என மெய்யோடு கூடாமல் தாம்
இடைச்சொல்லாய் நின்றாயினும் மேல் வரும் பெயர்களோடு கூடிச்
சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்தும். ஒகரம் மெய்யோடு
கூடியே தன் பொருள் உணர்த்துவதல்லது தானாகப்
பொருளுணர்த்தாதென்று உணர்க. இன்னும் அ-ஆ-உ-ஊ-எ-ஏ-ஒ-ஓ-ஒள
என்பன தம்முள் வடிவு ஒக்கும். இ-ஈ-ஐ தம்முள் வடிவு ஒவ்வா. இன்னும்
இவை அளபெடுக்குங்கால் நெட்டெழுத்தோடு குற்றெழுத்திற்கு ஓசை
இயையுமாற்றானும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார ஈகார
ஊகாரங்களாதலானும்
|
பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்புமை உயிர்மயங்கியலுட் பெறுதும்.
இம்முறை வழுவாமல் மேல் ஆளுமாறு உணர்க.
|
இனிக் ககார ஙகாரமுஞ் சகார ஞகாரமும் டகார ணகாரமுந் தகார
நகாரமும் பகார மகாரமுந் தமக்குப் பிறப்புஞ் செய்கையும் ஒத்தலின்,
வல்லொற்றிடையே மெல்லொற்றுக் கலந்து வைத்தார். முதனாவும்
முதலண்ணமும் இடைநாவும் இடையண்ணமும் நுனிநாவும் நுனியண்ணமும்
இதழியைதலுமாகிப் பிறக்கின்ற இடத்தின் முறைமை நோக்கி
அவ்வெழுத்துக்களைக் க-ச-ட-த-ப-ங-ஞ-ண-ந-ம-ன வென இம்முறையே
வைத்தார். பிறப்பு ஒப்புமையானும் னகாரம் றகாரமாய்த்
திரிதலானும் றகாரமும் னகாரமுஞ் சேரவைத்தார்.இவை தமிழெழுத்தென்பது
அறிவித்தற்குப் பின்னர் வைத்தார். இனி இடையெழுத்துக்களில் யகாரம்
முன் வைத்தார், அதுவும் உயிர்கள்போல மிடற்றுப்பிறந்த வளி
அண்ணங்கண்ணுற்று அடையப் பிறத்தலின், ரகாரம் அதனோடு பிறப்பு
ஒவ்வாதேனுஞ் செய்கைஒத்தலின் அதன்பின் வைத்தார். லகாரமும்
வகாரமுந் தம்மிற் பிறப்புஞ் செய்கையும் ஒவ்வாவேனுங் கல்வலிது
சொல்வலிது என்றாற்போலத் தம்மிற் சேர்ந்து வருஞ் சொற்கள்
பெரும்பான்மை யென்பதுபற்றி லகாரமும் வகாரமுஞ் சேர வைத்தார்.
ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபிலவேனும் 'இடையெழுத் தென்ப
யரல வழள' (எழு-21) என்றாற் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை கருதிச்
சேரவைத்தார்போலும்.
|
அகரம் உயிரகரமும் உயிர்மெய்யகரமுமென இரண்டு. இஃது ஏனை
யுயிர்கட்கும் ஒக்கும். எனவே, ஓருயிர் பதினெட்டாயிற்று.
|
இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பார் அறியாதார். அதனை
உருவென்றே கோடும். அது செறிப்பச் சேறலானுஞ், செறிப்ப வருதலானும்,
இடையெறியப்படுதலானுஞ், செவிக்கட்சென்று உறுதலானும், இன்ப
துன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவுங்கூடிப் பிறத்தலானுந், தலையும்
மிடறும் நெஞ்சுமென்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இதழும்
நாவும் மூக்கும் அண்ணமும் உறப் பிறக்குமென்றமையானும் உருவேயாம்.
அருவேயாயின் இவ்விடத்திற்கூறியன இன்மை உணர்க. அல்லதூஉம்,
வன்மை மென்மை இடைமையென்று ஓதியமையானும் உணர்க. உடம்பொடு
புணர்த்தலென்னும் இலக்கணத்தான் இவ்வோசை உருவாதல்
நிலைபெற்றதென்று உணர்க. அதற்குக் காரணமும் முன்னர்க் கூறினாம்.
|
இவ்வெழுத்துக்களின் உருவிற்கு வடிவு கூறாராயினார், அது
முப்பத்திரண்டு வடிவினுள் இன்ன எழுத்திற்கு இன்ன வடிவெனப் பிறர்க்கு
உணர்த்துதற்கு அரிதென்பது கருதி. அவ்வடிவு ஆராயுமிடத்துப்
பெற்றபெற்ற வடிவே தமக்குவடிவாம், குழலகத்திற் கூறிற் குழல்வடிவுங்
குடத்தகத்திற் கூறிற் குட வடிவும் வெள்ளிடையிற் கூறின் எல்லாத்திசையும்
நீர்த்தரங்கமும்போல.
|
'எல்லா மெய்யு முருவுரு வாகி' (எழு-17) எனவும், 'உட்பெறு புள்ளி
யுருவா கும்மே' (எழு-14) எனவும், 'மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல்'
(எழு-15) எனவுஞ் சிறுபான்மை வடிவுங் கூறுவர். அது வட்டஞ் சதுரம்
முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும்
நுண்ணுணர்வு இல்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு
வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலிற்கட்புலனாகிய வரிவடிவும்
உடையவாயின. பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார், உயிர்க்கு
வடிவின்மையின். 'எகர வொகரத் தியற்கையு மற்றே' (எழு-16) எனச்
சிறுபான்மை உயிர்க்கும் வடிவு கூறினார். (1)
|
| குறிப்பு : |
இனைத்து - இவ்வளவிற்று. வடிவு என்றது ஒலிவடிவை. குறைவு என்றது
மாத்திரைக் குறுக்கத்தை. கூட்டம் - உயிரும் மெய்யும் கூடல். பிரிவு -
கூடிய உயிரும் மெய்யும் பிரிந்து நிற்றல். ஒன்று பலவாதல் - ஓரெழுத்தாய்
நின்றன பிரிந்து பலவாதல். அஃதாவது, 'குன்றேறாமா' என்புழி மாவின்
முன் நின்ற 'றா' என்றும் ஓரெழுத்தே 'குன்றேறு ஆமா' எனப் பிரிப்புழி,
'று-ஆ' எனப் பலவாதல். இதனை, இவ்வதிகாரத்து 141-ம் சூத்திரத்தாலறிக.
|
திரிந்ததன் றிரிபு அதுவென்றலாவது:- நிலைமொழி வருமொழிகளில்
யாங்காயினும் ஓரெழுத்திற்குத் திரிபு கூறி அம்மொழிகளுள் ஒன்றற்கு,
மீளவுந் திரிபு கூறுங்கால் அத்திரிபெழுத்து [திரியப்பட்ட எழுத்து]
மொழியை யெடுத்துக்கூறாமல் திரியப்பட்டவெழுத்து மொழி அத்திரிந்த
எழுத்து மொழியுமாம் என்னும் நயம்பற்றி அத்திரிந்த எழுத்து மொழியையே
யெடுத்துப் புணர்ச்சிகூறல். உதாரணம் உருபியலில், 'நீயெ னொருபெயர்
நெடுமுதல் குறுகும் - ஆவயி னகர மொற்றா கும்மே' என்னுஞ்
சூத்திரத்தால் 'நீ' 'நின்' எனத் திரியுமெனக் கூறி, மீளவும் அந்த 'நீ'
என்பதற்குப் பொருட்புணர்ச்சி விதி கூறுங்கால், முற்கூறிய 'நின்' என்னும்
திரிபு மொழியை யெடுத்துக் கூறாமல் 'நின்' எனத் திரிந்ததும் 'நீயே'
என்பது பற்றி அதனையேயெடுத்து 'நீயெனொருபெய ருருபிய னிலையும்'
எனக் கூறல் காண்க. இன்னும் குற்றியலுகரப் புணரியலில் 'மூன்று மாறும்
நெடுமுதல் குறுகும்' என்ற ஆசிரியர், 'மூன்ற னொற்றே பகார மாகும்'
எனக் கூறுதலும், 'ஆறென் கிளவி முதனீ டும்மே' எனக் கூறுதலும்
அன்னவாதல் உணர்க. இன்னும், புள்ளிமயங்கியலில், லகரவீற்று மொழி
கட்குத் திரிபு கூறுங்கால் 'அல்வழி யெல்லா முறழென மொழிப' எனக்கூறி
லகரம் றகரமாகுமெனக் கூறிய ஆசிரியர் மீளவும் அவற்றிற்குத் திரிபு
கூறுங்கால், 'தகரம் வரும்வழி யாய்தம் நிலையலும்' என்னுஞ் சூத்திரத்தால்
லகரம் ஆய்தமாகத் திரியுமென்று திரிந்த மொழியீற்றையே [லகரத்தையே]
எடுத்துக் கூறலுமதுவாம். இனி 'லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்
தனவென வரிற் றனவா கும்மே' என்பதனால் தகரம் றகரமாகத்
திரியுமென்று கூறிய ஆசிரியர், மீள லகரத்திற்குத் திரிபு கூறுங்கால்
றகரமெனத் திரிபெழுத்து மொழியை எடுத்துக் கூறாமல் 'தகரம் வரும்வழி'
எனத் திரிந்த எழுத்து மொழியை யெடுத்துக் கூறலும் அதுவேயாம்.
நன்னூலுரையுள் மயிலைநாதர் 'திரிந்ததன் றிரிபு மதுவுமா மொரோவழி'
என்று கூறலின் இத் திரிந்ததன் றிரிபு அதுவென்றன் முதலியன முன்
யாதோ ஒரு நூலிலே சூத்திரங்களா யிருந்தனபோலும்.
|
திரிந்ததன் றிரிபு பிறிதென்றலாவது:- ஓரீறு பிறிதோரீறாகத் திரிந்து
அவ்வாறே [பிறிதீறாகவே] நின்று புணருமென்றல். அது மரமென்பதனோடு
அடியென்னும் வருமொழி புணருங்கால் மகரங்கெட்டு அகரவீறாகவே
(பிறிதீறாகவே) நின்று புணருதல் போல்வது. இங்ஙனமே 'னகரவீறு' ம்,
றகரமாகத் திரிந்து பிறிதீறாகவே நின்று புணர்தல் காண்க.
|
திரிந்ததன் திரிபு அதுவும் பிறிதுமென்றலாவது : - ஓரீறு
வேறோரெழுத்துப் பெற்றுப் பிறிதெழுத்தீறாக நின்று புணருமெனக் கூறி,
அத்திரிபீற்றிற்காயினும் அத்திரிபீற்றோடு புணரும் வருமொழிக்காயினும்
மீளவும் ஒன்று விதிக்கவேண்டி, அத்திரிபீற்றை எடுத்துப் புணர்க்குங்கால்,
அத்திரிபீறு திரிந்த ஈற்றோடுங் (இயல்பீற்றோடும்) கூடிநிற்றலின், அதுவும்
(இயல்பீறும்) பிறிதும் (விதியீறும்) ஆயே நின்று புணருமென்றல். அது,
ஆறனுருபோடும் நான்கனுருபோடும் புணருங்கால் நெடுமுதல் குறுகிநின்ற
தம், நம், எம், தன், நின், என் என்னும் மொழிகளின் ஈற்றிலுள்ள மெய்கள்
ஓரகரம் பெற்றுப் புணருமென, "ஆற னுருபினு நான்க னுருபினுங் - கூறிய
குற்றொற்றிரட்ட லில்லை - யீறாகு புள்ளி யகரமொடு நிலையு - நெடுமுதல்
குறுகு மொழிமுன் னான" என்னுஞ் சூத்திரத்தால் விதித்த ஆசிரியர், மீள
அவ்வகரம் பெற்ற தம் முதலிய மொழிகளோடு அது உருபை வைத்துப்
புணர்த்துங்கால், அம்மொழிகளை மகரம் முதலிய புள்ளியீறும் (அதுவும்)
அகரவீறும் (பிறிதும்) ஆகிய இரண்டீறுமாயே, "ஆறனுருபி னகரக்கிளவி
யீறாககர முனைக்கெடுதல் வேண்டும்" என்னுஞ் சூத்திரத்துள், ஈறாககரம்
என வைத்துப் புணர்த்தல் காண்க. ஈறாககரம் - புள்ளியீற்றுக்களுக்கு
ஈறாகிய அகரம் என்பது பொருள். தம் முதலிய என்னாது தாமுதலிய
புள்ளியீற்றகரமென்று புள்ளியீறு கூறினமையினானே அதுவும், அவற்றின்
ஈறாகிய அகரம் என்றதனானே பிறிதுந் தோன்றக் கூறினமை காண்க.
இன்னும் 'வெரிநெ னிறுதி முழுதுங் கெடுவழி - வருமிட னுடைத்தே
மல்லெழுத் தியற்கை' என்னுஞ் சூத்திரத்து 'வெரிநு' என்று சொல்ல
வேண்டியதை 'வெரிந்' என்றதனானே திரிந்ததன் றிரிபு அதுவென்பதும்,
முழுதும் கெடுவழி' என்றதனாலே பிறிதென்பதும் தோன்றக் கூறியமையானே
அதுவும், திரிந்ததன் றிரிபு அதுவும் பிறிதும் என்றலாம். இன்னும்,
இத்திரிபுகள் பிறவாறு வருவனவுளவேனு மறிந்துகொள்க.
|
நிலையிற்றென்றல் என்றது - நிலைமொழியும் வருமொழியும்
பொருட்பொருத்தமுறப் புணரும் தழுவுதொடர்ப்புணர்ச்சி விதிகளை.
'பொற்குடம்' என்பதுபோல வருந் தொடர்மொழிகளில் நிலைமொழியும்
வருமொழியும் பொருட்பொருத்தமுற ஒன்றை ஒன்று தழுவிப் புணர்ந்து
நிற்றலின் ஆண்டுக் கூறுஞ் செய்கை என்றும் நிலையுடைமையின்
|
நிலையிற்றென்றல் என்றார். பதச்சேதகாலத்துந் நிலைத்தலானே
நிலையிற்றென்றார்.
|
நிலையாதென்றல் என்றது - நிலைமொழியும் வருமொழியும்
பொருட்பொருத்தமுறப் புணராத புணர்ச்சி விதிகளை. முன்றில்
என்பதுபோல வரும் தொடர்மொழிகளில் நிலைமொழியும் வருமொழியும்
பொருட்பொருத்தமுற ஒன்றை ஒன்று தழுவிப் புணர்ந்து நில்லாமையின்
[முன்றில் என்பது இல் முன் எனப்பொருள் கொள்ளுங்கால்
நிலைமொழியும் வருமொழியுந் தம்முள் இயையாமையின்] ஆண்டுக் கூறுஞ்
செய்கை என்றும் நிலையாமையின் நிலையாதென்றல் என்றார். "மாயிரு
மருப்பிற் பரலவ லடைய இரலைதெறிப்ப" என்பதிலும் மருப்பின் என்பது
பரலோடியையாது இரலையோடியைதலின் அங்ஙனம் இயையுங்கால் ஆண்டு
னகரம் றகரமாயத் திரிந்த செய்கை நிலைபெறாமையின் [இலவாதலின்]
அதுபோல்வனவும் அன்னவேயாம். இதனை "மருவின் றொகுதி மயங்கியன்
மொழியு - முரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே" என்னும் [எழு-111]
சூத்திரஉரை நோக்கி உணர்க. பதச்சேத காலத்தும் அந்நுவயகாலத்தும்
நிலையாமையானே நிலையாதென்றார்.
|
நிலையிற்றும் நிலையாதுமென்றல் - ஓரிடத்தில் பெற்ற புணர்ச்சி நிலை
அதுபோன்ற வேறோரிடத்தில் நிலைபெறாதென்றல். அது 'பலாஅக்கோடு'
எனக் குறியதன் முன்னர் நின்ற ஆகாரவீறு பெற்ற அகரத்தை அதுபோன்ற
இராவென்கிளவி பெறாதென விலக்கல் போல்வன. குறியதன் முன்னர் நின்ற
ஆகாரவீறு அகரம் பெறும் என்ற இப்புணர்ச்சி விதி பலா முதலிய
ஆகாரவீற்றில் நிலை பெற்றும் அதுவே ஈறாய இராவென்கிளவியில்
நிலைபெறாதும் வருதலின் நிலையிற்றும் நிலையாது மென்றல் என்றார்.
|
கருவி
|
கருவி - செய்கைக்குரிய கருவி. இக் கருவி செய்கைக்கு நேரே
கருவியாவதும் பரம்பரையாற் கருவியாவதும் என இருவகைத்து.
அகக்கருவியும் அகப்புறக்கருவியும் நேரே கருவியாவன. ஏனைய
|
பரம்பரையாற் கருவியாவன. நூன்மரபு பிறப்பியல்களிற் கூறும்
இலக்கணங்களும் சொற்குக் கருவியாகுமுகத்தால் செய்கைக்குக்
கருவியாதலின் பரம்பரையாற் கருவியாயின.
|
அகக்கருவியாவது - செய்கைப்படுதற்குரிய நிலைமொழி
யீற்றெழுத்துப்பற்றிவரும் விதிகளைக் கூறுவது. அஃது "எகர வொகரம்
பெயர்க்கீ றாகா" என்றார் போல்வது. இது செய்கைக்குரிய
ஈற்றெழுத்துப்பற்றிய விதியாதலின் அகக்கருவியாயிற்று.
|
"அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி - யுளவெனப் பட்ட
வொன்பதிற் றெழுத்தே - யவைதாங் - க ச த ப வென்றா ந ம வ
வென்றா - வகர அகரமோ டவையென மொழிப" என்பதும் அகக்
கருவியாகும்; செய்கைக்கு அண்ணிய கருவியாதலின், முதனிலை
இறுதிநிலைகளும் அகக்கருவியாகும்; மொழிக்கு முதனிற்கும் எழுத்துக்களும்
ஈற்றினிற்கு மெழுத்துக்களுஞ் செய்கைக் குபகாரப்படுதலின்.
|
அகப்புறக்கருவியாவது - புணர்ச்சி இலக்கணமும், புணர்ச்சிக்குரிய
திரிபுகள் இவையென்பதும், இயல்பும், புணர்ச்சிவகையும், நிலைமொழிகள்
செய்கைவிதியிற் பெறுஞ் சாரியைகள் வருமொழியொடு புணருங்கா லடையுந்
திரிபுகளுமாகி இருமொழிகளும் செய்கைப்படுதற் கேற்றவாய்வரும்
விதிகளைக் கூறுவது.
|
புறக்கருவியாவது - செய்கைக்குரிய நிலைமொழி வருமொழிகளாய்
நிற்குமொழிகளின் மரபு கூறுவது. அது மொழிமரபு. அது செய்கைக்குரிய
கருவிவிதிகூறாது செய்கைப்படுதற்குரிய மொழிகளின் மரபு கூறுதலின்
புறக்கருவியாயிற்று.
|
புறப்புறக்கருவியாவது-மொழிகளாதற்குரிய எழுத்துக்களது இலக்கணமும்
பிறப்புங் கூறுவது. அது நூன்மரபும் பிறப்பியலுமாம். அவை செய்கைக்குரிய
புறக்கருவியாகிய மொழிகளாதற்குரிய எழுத்துக்களின் இலக்கணமும்
பிறப்புங் கூறுதலின் புறப்புறக் கருவியாயின. இங்ஙனமே நால்வகைக்
கருவியின் இலக்கணமுமறிந்துகொள்க.
|
எழுத்துக்கள் மொழியாகி நின்று பின் செய்கை அடைதலின் அவற்றி
னிலக்கணங்களைச் செய்கைக்குப் புறப்புறக்கருவியென்றும், அம்மொழிகளே,
நிலைமொழி வருமொழியாக நின்று செய்கை பெறுதலின்
மொழிகளினிலக்கணங்களைப் புறக்கருவியென்றும், அங்ஙனம் மொழிகள்
புணருங்கால் நிலைமொழியீறும் வருமொழி முதலுமடைகின்ற
திரிபிலக்கணங்களையும் இயல்பையும், நிலைமொழி பெறுஞ் சாரியைகள்
இவை என்பதையும், அவற்றின் திரிபு முதலியவற்றையும் கூறுதலின்
புணரியலை அகப்புறக்கருவியென்றும், நிலைமொழியீற்றில் நிற்றற்குரிய
எழுத்து விதி முதலியவைகளைக் கூறும் விதிகளை அகக்கருவியென்றும்
வகுத்தனர் என்க. இவற்றுள் எழுத்துக்களின் இலக்கணமும் மொழியி
னிலக்கணமும் பரம்பரையாற் கருவியாதல் காண்க. கருவியொன்றே
அகம், அகப்புறம், புறம், புறப்புறம் எனச் செய்கை நோக்கி நான்காக
வகுக்கப்பட்டது.
|
செய்கை
|
இனிச் செய்கை நான்கனுள் அகச்செய்கையாவது - நிலைமொழியீறு
இன்ன இன்னவாறு முடியுமெனக் கூறுவது. அது பொற்குடம்
என்றாற்போல்வது. இது ஈற்றெழுத்துக்கள் படுஞ் செய்கை விதியாதலின்
அகமாயிற்று. இதுபற்றியே தொகை மரபு முதலிய ஓத்தினுள் இன்னஈறு
இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவனவெல்லா மகச்செய்கையென்றார்
உரைகாரர்.செய்கை யோத்துக்களை அகத்தோத்தென்பதும் இதுபற்றியேயாம்.
|
அகப்புறச்செய்கையாவது - நிலைமொழியீறு பெறும் முடிபன்றி
நிலைமொழியீறு
|
பெற்று வரும் எழுத்து முதலியவற்றின் முடிபு கூறுவது. அது
புள்ளியீற்றுகள் உகரம் பெறுமென விதித்த புள்ளியீறுகள் பின் அவ்வுகரம்
பெறாவென விலக்குதல்போல்வன. இது ஈற்றெழுத்தின் விதியின்றி
ஈற்றெழுத்துப்பெற்று வரும் எழுத்தைப் பற்றிய விதியாதலின்
அகப்புறமாயிற்று. இதுபற்றியே "உகரமொடு புணரும் புள்ளி யிறுதி -
எகரமு முயிரும் வருவழி யியற்கை" என்றாற் போல்வன அகப்புறச்
செய்கை என்றார் உரைகாரர். "வேற்றுமைக் குக்கெட வகரம் நிலையும்"
எனவும் "இராவென் கிளவிக் ககர மில்லை" எனவும் வருவனவுமவை.
|
புறச்செய்கையாவது - வருமொழிச்செய்கை கூறுவது. இது நிலைமொழிச்
செய்கையன்றி வருமொழிச் செய்கையாதலின் புறச்செய்கையாயிற்று.
அது பொன்னரிது, பொன்றீது என்றாற்போல வருவது. இதுபற்றியே
"லளவென வரூஉம் புள்ளி முன்னர்த் - தனவென வரிற் றனவா கும்மே"
என்றாற்போல்வன புறச்செய்கையென்றார் உரைகாரர்.
|
புறப்புறச் செய்கையாவது - நிலைமொழியீறும் வருமொழி முதலும்
செய்கைபெறாது நிற்ப அவ்விரண்டையும் பொருந்துதற்கு இடையில்
உடம்படுமெய்போன்ற ஓரெழுத்து வருவது போல்வது. அது 'தீயழகிது'
என்றாற் போல்வது. இதுபற்றியே "எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே -
யுடம்படு மெய்யி னுருவுகொளல் வரையார்" என்றாற் போல்வன
புறப்புறச்செய்கை யென்றா ருரைகாரர்.
|
நிலைமொழி யீறுபற்றி வருவதை அகச்செய்கையென்றும்,அவ்வீறுபற்றாது
அவ்வீறு பெற்றுவரும் எழுத்தைப்பற்றி வருவது அவ்வீற்றுக்குப் புறமாதலின்
அதனை அகப்புறமென்றும், வருமொழிச் செய்கைபற்றி வருஞ்செய்கை
நிலைமொழியீறும் அது பெற்றுவரும் எழுத்தும் பற்றிவருஞ் செய்கையன்றி,
அவற்றிற்குப் புறமாதலின் அதனைப் புறச்செய்கை யென்றும்,
நிலைமொழியீறும் வருமொழி முதலும் பற்றாதுவருஞ் செய்கை
அவ்விரண்டற்கும் புறமாதலின் அதனைப் புறப்புறமென்றும் கூறினர் என்க.
|
கு - பு: இங்கே கூறிய கருவியுஞ் செய்கையும் எழுத்ததிகாரத்துக்கு
மாத்திரமே உரையாசிரியராலும் நச்சினார்க்கினியராலும்
உரைக்கப்பட்டமையை அவ்விருவரையும் நோக்கித் தெளிந்து கொள்க.
|
எஃகுதல் - பஞ்சினை நொய்தாக்கல், மூன்றுறுப்பு - சூத்திரம், ஓத்து,
படலம். ஆண்டு என்றது செய்யுளியலை. வண்ணம் என்றது -
செய்யுளுக்குரிய வண்ணங்களை. அவை பாவண்ணம் முதலியன. அதனைப்
பொருளதிகாரம் 526-ம் சூத்திரம் முதலியவற்றானுணர்ந்துகொள்க.
|
உடம்பொடு புணர்த்தலென்னு மிலக்கணத்தா லிவ்வோசை
யுருவாதனிலைபெற்றதென்பது - பழனிமலையிலிருக்குங் குமரன்
திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் முதலிய இடங்களிலு மிருப்பானென்றால்,
பழனிமலையும் அவனுக்கு ஓரிடமாதல் தோன்றுதல்போல,
எழுத்துக்களுக்குப் பிறப்பிடங்களும் வன்மை மென்மைகளுஞ் சொல்லி
அதன்கண் உருவுடையவென்பதையும் பெறவைத்தமையை.
|
|
1. எட்டுவகையான எனவும் பாடம். அப்பாடமே நலம். என்னை? முன் எட்டுவகையானும் என்று நச்சினார்க்கினியரே வகுத்துக் கூறியிருத்தலின்.
|
2. எட்டிறந்த பல வகையாவன எனவும் பாடம். அப் பாடமே நலம். என்னை? முன் எட்டிறந்த பலவகையானும் என நச்சினார்க்கினியரே வகுத்துக் கூறியிருத்தலின்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக